ஸ்ரீ அய்யனார் சுவாமி புராணம்

உலகெலாம் உணர்ந்தோர்க்காரியவனாகிய சிவபெருமான், ஆயிரம் சூரியர்கள் உதித்தாற்போன்று பேரொளிச் சுடராய்த் திகழும் அன்னை பராசக்தி உடன் வீற்றிருந்தார். பாம்பணையில் பள்ளி கொண்டு பிரபஞ்சம் அனைத்தும் காத்தருளும் பரந்தாமனோ செல்வதிருமகளுடன் எழுந்தருளியிருந்தார். பாரினைப் படைக்கும் நான்முகனோ நான்மகளாம் கலைமகளுடன் காட்சியளித்தார். முப்பது முக்கோடி தேவர்களும், சப்தரிஷிகளும், சிவகணங்களும், நிதியாதேவிகளும் கூடி நின்று முப்பெருந்தேவ, தேவியாரிப் போற்றி வணிங்கி மலர்தூவி வழிப்பட்டு கொண்டிருந்தனர்.

நந்தியம்பெருமானின் மத்தளச் சத்தமும், கலைவாணியின் கச்சபி வீணையின் தேவ கானமும் வானுலகை நிறைந்தன.
அப்போது மண்ணுலகில் அக்னி ஹோத்திரம் நாளும் மறவாமல் செய்து தர்மத்தை போற்றும் புண்ணிய தவசீலர்களாம் முனிபுங்கவர்கள் பதறியடித்து கொண்டு அங்கு வந்து நின்றனர். அபயம் தேடும் குரலில் அவர்கள்,

தேவாதிதேவா !எம்பெருமானே ! ப்மாசுரன் என்ற அசுரர் தலைவன் மூவலகையும் தமதாட்சியில் அடித்து நொறுக்கி வருகிறான். பூலோகம் பாழாகி வருகிறது. எங்களால் வேள்வியும், தவமும் நிம்மதியாய்ச் செய்ய முடியவில்லை. அவன் தொட்டதெல்லாம் சாம்பலாகிவிடுகிறது. தாங்கள் தாம் அசுரனை அழித்து மீண்டும் தவம் தழைக்க அருள் புரியவேண்டும் என வேண்டினார்.

பிரமதேவன் திருவாய் மலர்ந்தருளினார்.

பார்த்தீர்களா எம்பெருமானே இக்கொடுமையை? அசுரனின் கடுந்தவத்தை மெச்சி சாகா வரம் தந்தவர் தாங்களல்வா? பஸ்மாசுரனுக்கு அழிவு வருவது எங்கனம் !
எந்நாட்டவர்க்கும் இறைவனே அதற்கு வழியும் கூறினார் : தவசீலர்களே அஞ்ச வேண்டாம்.
அகங்காரத்தினால் பஸ்மாசுரன் அழியும் வேளை வந்தது. பாற்கடலில் பள்ளி கொள்ளும் மகாவிஷ்ணுவே அவதாரம் எடுத்து அசுரனை மயக்கி, அழித்து அறம், வெல்ல அருளட்டும். அங்ஙனமே ஆகுக ! என்று பார்த்தன் அபயகரம் காட்டியருளினார். தேவர்கள் மகிழ்ந்தனர்.

அகங்காரம் தலைக்கேறும் போது அறியாமை கண்களை மறைத்து விடுகிறது. போக வாழ்வில் எல்லை மீறும் எவரும் சோகத்திலியே ஆழ்வார். அவ்வாறே பஸ்மாசுரனும் தன் முடிவினை சந்திக்கும் நிலை வந்தது. திருமால் பேரழகு வாய்ந்த பொன்மகளாம் கால் பதித்தார். கொஞ்சும் சலங்கை கலீர், கலீர் என்று ஒலிக்க விண்ணதிர, மோஹினியின் நடனம் அசுரனை அடிமையாக்கியது.
மோஹினின் பேரழகில் மையல் கொண்டான் அசுரன். அவளை அடைந்திட வேண்டி விருப்பம் தெரிவித்தான். தன்னையடைய வேண்டுமானால், தனக்கு இணையாக நாட்டியமாட வேண்டுமென்றாள் மோஹினி, அதற்கு சம்மதித்தான் அசுரவேந்தன். ஆரம்பமாகியது மோஹினியாட்டம். அவள் என்ன முத்திரை காட்டி அபிநயங்கள் பிடிக்கிறாளோ அதேபோல் அசுரனும் செய்தான். நவரசங்களும் நாட்டியத்தில் நயமாய்க் கலந்தன.

மோஹினி விஸ்வமய முத்திரை காட்டினாள் மோஹமுற்ற அசுரனும் அவ்வண்ணமே செய்தான். மாயரூபிணி பத்மமுத்திரை காட்டினாள் மாயவலையில் வீழ இருப்பவனும் அவ்வாறே கட்டினான். மோஹினியாள் இறுதியாக தன் வலதுகரத்தால் தன் சிரசை தொட்டு அபிநயம் பிடித்தாள்.

பஸ்மாசுரனும் தன் வலதுகரத்தால் தன் சிரசை தொட்டு நின்றான். மறுகணமே தான் பெற்ற வரத்தாலேயே அசுரனுக்கு அழிவு வந்தது. அக்கினி தேவன் அவனை சாம்பலாக்கி கடமைமுடித்தான். தேவாதிதேவர்கள் பொன்மாரி பொழிந்து மோஹினி ரூபனாம் ஸ்ரீ மகா விஷ்ணுவைப் போற்றி வணங்கினர். பிரம்மா, சரஸ்வதியும், ருத்திரர், பார்வதியும் அங்கு தோன்றி தேவர்களையும், முனிவர்களையும் வாழ்த்தினர்.

நாராயணா ! நாராயணா ! எனப்போற்றிக் கொண்டு அப்போது அங்கே வந்த நாரதரிஷி கூறினார், சுவாமி யுகம் யுகமாய் அதர்மம் தலையெடுப்பதும், அதனை தாங்கள் அழித்து தர்மத்தை நிலை நாடுவதுமாக, இந்நிலை தொடர்கிறதே நானிலத்து மக்கள் நாளும் நிம்மதியாய் வாழ கலியுகத்தில் மக்கள் எளிதில் வழிபட்டு அருள் பெற நிரந்தரமாய் ஓரு நல்லருள் புரிய வேண்டும் ..!
தேவகுருவான பிரஹஸ்பதி கூறினார் :படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் பஞ்சகிருத்தியங்களையும் சதாசர்வ காலமும் செய்து வரும் ஐந்து சக்திகள் ஒன்றிணைந்தால் அது மஹா சக்தியாகும். அதுவே ஞானசக்தியாகும், அத்துடன் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் இணைந்தால் அதன் ஆற்றலுக்கு அளவேது ? உடனே அங்கே ஐந்தொழில் புரியும் தேவசக்திகள் தம் தேவியருடன் காட்சி தந்தருளினார்.

பிரம்மா – சரஸ்வதி, மஹா விஷ்ணு – மஹாலட்சுமி, ருத்திரன் – பார்வதி, மஹேஸ்வரன் – மஹேஸ்வரி மற்றும் சதாசிவர் – மனோன்மணி என முறையே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என இப்ப்ரபஞ்சசக்த்திகள் உடனே அங்கே ப்ரசன்னமாயினர்.

மோஹினி வடிவத்துள் சரஸ்வதி முதலான மனோன்மணி சக்திகள் யாவரும் ஐக்கியமாயினர்.ருத்திரருக்குள், பிரம்மா முதலாக சதாசிவர் வரையானோர் ஒன்றினார்கள்.மோஹினியும், ருத்திரமும் ஒன்றிணைய பேரழகும் பேராற்றலும் பெருங்கருணையும் மிக்க பாலகன் ஒருவன் தோன்றினான். பண்பின் புகலிடமாய் அவன் கண்கள் ஒளிர்ந்தன.வீரத்தின் விளை நிலமாய் அவன் மார்பு துடித்தது. அதன்பின் வெளிப்பாடாய் அவன் புன்சிரிப்பு மிளிர்ந்தது.

தேவர்கள், தோன்றிட பாலகனைப் போற்றி வணங்கினர்.

கஜமுகனாம் மூத்த பிள்ளையாரும், ஆறுமுகனாய் செந்தில் வேலவனும் பிறந்திட தம் சகோதரனை வாஞ்சையுடன் ஆசிரவதித்தனர்.

பார்வதிதேவி, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி, நான்முகி, நாராயணி, அம்பிகை லோகமாதா தன இளைய மகனைப் பாசத்துடன் ஏந்தி திருமார்பில் அணைத்து, சுவாமி ! இப்பாலகனுக்குத் திருநாமம் இட்டு அருளுங்கள் ! என்று வேண்ட, சிவபெருமான் பகன்றார் : தேவி ! படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து சக்திகள் ஓருங்கே இணைந்து இவன் தோன்றியதால், ஐயன் என்று இவன் வழங்கப்படுவான். பூலோக மக்கள் இவனை ஸ்ரீ ஐய்யனார்என்று போற்றி வணங்குவர், தென் தமிழ் நாட்டில் காவல் தெய்வமாக இவன் திகழ்வான், ஒவ்வொரு கிராம எல்லையிலும் எழுத்தருளி மக்கள் அறம் வழுவாமல் வாழ அருள் புரிவான். ஆகவே வணிகர் குலம் .இவனை குலதெய்வமாக வணங்குவர் சாத்திரங்களில் பெரும் ஞானம் மிக்கவனாய் இவன் திகழ்வதால் சாஸ்தாஎன்றும் வேதம் அறிந்தோர் போற்றுவர். தர்மத்தையும் சாஸ்திரத்தையும் காத்திடுவான் ஆதலால் ஸ்ரீ தர்மம் சாஸ்தா என்று மக்கள் வழிபடுவர். ஹரிக்கும், ஹரனுக்கும் மகனாய் தோன்றியதால் ஹரிஹர புத்திரன் என்றும் புகழப்படுவான்.

கேரள நாட்டிலே பந்தளத்து மன்னனால் வளர்க்கப் பெற்று ஸ்ரீ மணிகண்டன்என்றும், முக்தி நெறியே சிறந்த ப்ரம்மஞானமாகும் என்றுணர்த்தி தத்துவமஸி என்ற மஹாவாக்யத்தின் பொருளை எளியவருக்கும் உணர்த்தும் ஜோதிப் பரம்பொருளாகி, சபரிக்கு ஸ்ரீ ராமன் மோட்சம் தந்த ஐந்துமலைக்கு அதிபதியாகி ஸ்ரீ ஐயப்பன் என்று வணங்கப்படுவான் !

குழந்தையும் தெய்வமும் ஒன்றேன உணர்த்த குளத்துப்புழை எனுமிடத்தில் பாலகனாகவும், தர்மபரிபாலனம் செய்ய அச்சன் கோவிலில்அரசனாகவும், கிரஹஸ்த தர்மத்தை இல்லறமே நல்லறம் என்றுணர்த்த ஆரியங்காவில் இச்சாசக்தி, கிரியாசக்தி வடிவங்களாகிய பூரணை, புஷ்கலை என்னும் தேவியருடன் ஐயனாகவும், சபரிமலையில் பிரம்மச்சாரிய விரதம் பூண்ட சந்நியாஸ தர்மத்தை நிலை நாட்டும் ஐயப்பனாகவும் இவனே அருள் புரிவான் !

தேவாதிதேவர்களின் வாழ்த்தொலி முழங்க வானுயர்ந்து, நெடிதுவளர்ந்து, பிரம்மத்துள் பிரம்மாகி, மாயத்துள் மாயமாகி, மண்ணுலகம், விண்ணுலகும் கண்ணுறத் தோற்றமாகி மத கஜ வாகனத்தில், புலிகள் புடை சூழ பூரணை, புஷ்கலை தேவியர் இருமருங்கில் அமர, லோகபரிபாலனத்தின் கருணையுள்ளம் கொண்டார், ஸ்ரீ ஹரி ஹர புத்திரன் ஸ்ரீ ஐய்யனார் சுவாமி !

லோக வீரம் மஹா பூஜ்யம்
ஸர்வ ரக்ஷகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயநாதம்
சாஸ்தாரம் ப்ரணாமம் யஹம் !

தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

சுபம்

சமுதாய மற்றும் ஆன்மீக பணிகளை இறைவன் உத்திரவு படி செய்து வருகிறோம்.